Monday, June 23, 2014

#காதலனுக்காய் அல்ல ..காதலுக்காய் மட்டும்

எனதன்பே..
நீள் பாதையில் நனைந்தபடி பயணப்பட்டிருந்தேன்..!
இக்கடல் பாதையில்
வளையங்களை தோன்றச்செய்கிறாய் நீ..
வெறுங்காற்றை தான் உயிர் என்று நிரப்பியிருந்தேன்-என் காவலனே
பெருங்காற்றில் தான் மீண்டுமொரு உயிர்பெறுகிறேன்..
இது பளிங்குக்கனவுகளையும்
ஆதிக்காதலையும் ஒத்திருக்கிறது.

பெரும் துடுப்பு ஒன்றை வலித்தபடியே
நிதானப்புன்னகையை என் திசை நோக்கி விரித்துவிடுகிறாய்.
இப்போது இரு கைகைளையும் அகல விரித்து
என் தேசத்திற்குள் உனை நிரப்புகிறேன்.

ஈரத்தின் துணிக்கைகளில் ஒவ்வொன்றிலும்
உன் காதலின் தூறல் சொட்டிக்கொண்டிருக்கிறது..!
இதுவரையும் உன்னை அணைத்துக்கொள்ளவில்லை.
கண்ணியத்தின் இந்த இடைவெளிகளையும்
அணுவும் மீதமின்றி காதல் காதல் காதலே நிறைத்திருக்கிறது..!

இடது தோளில் உன் பயத்தின்தவிப்புக்களையும்
அதன் கேசங்களில்
என் நியாயத்தின் தீர்த்தங்களையும் பரிமாறிக்கொண்டிருக்கிறேன்..!

நீல நதி இது நிலவில் குளிப்பது போல்
இவ் ஓடம் முழுவதுமாய் கரைந்திருக்கிறது உலகக்காதலின்
இரகசிய கண்ணீர்..
இதுவரையும் நிதானப்புன்னகையை மட்டுமே வெளிப்படுத்துகிறாய்
காதலே..!

மயிர்க்கான்களில் ஒட்டிக் கொள'கிறாய் என்காதலே..!
நுரையும் கரையும் தொட்டுக்கொள்ளும் இடைவெளிகளில்
நாற்காலி ஒன்று அமைத்துக்கொள்வோம்..!

..

எனக்காய் ஒரு கிளிஞ்சல் மட்டும் பத்திரப்படுத்தி வை.
ஏகாந்த பயணத்தின் இரவு
ஒன்றில் மீண்டும் உனக்கான படகை அனுப்புவேன்..

பின்னொருநாளில் நரைத்த என் காலங்களில்
அக்கிளிஞ்சல் கொண்டு ஏதேனும் தோற்றம் உண்டாக்கு.
காதோரத்து வெள்ளிக்கம்பியில் கூட முன்னைநாள்
ஊஞ்சல்களின் தடம் இருக்கும்.
ஒருவேளை நம் காதல் அன்று அவ்விடத்தில்
மீண்டும் பிள்ளைப்பயணம் புறப்படலாம்.

நீ அறிந்திருப்பாயா...
ஜிப்ரானின் காதலி கூட ஒரு காலத்தில் ஏகாந்த பயணியாக இருந்திருப்பாள்.

நான் இனி தனிப்பயணம் போய் வருகிறேன்.-அதுவரை
நம் காதல்
வளர்ந்து நனைந்திருக்கும் பெருவெளியில் உட்கார்ந்திரு

#காதலனுக்காய் அல்ல ..காதலுக்காய் மட்டும்

2 comments:

  1. வணக்கம்

    நீல நதி இது நிலவில் குளிப்பது போல்
    இவ் ஓடம் முழுவதுமாய் கரைந்திருக்கிறது உலகக்காதலின்
    இரகசிய கண்ணீர்

    இந்த இடத்தில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...