Saturday, July 2, 2016

இழைகின்ற ஈரக் கனவுகளால் எனை பின்னிக் கொள்வாய்...!.

நிரம்பா வாழ்க்கையின் குவளைகளில் நேசம் ஊற்றி முயன்றுகொண்டிருந்த பாதி ஜாமங்களை பற்றி அழகு அழியாத் தனிமையில் என் காதோரங்களில் நீதான் பேசிக்கொண்டிருந்தாய் அனன்யா.ஒரு வாக்குறுதி போல தீர்க்மாயிருந்தது உன் உஷ்ணங்கள்.மொட்டவிழும் அந்தக்கணங்களை மிக அறிந்த காற்றாய் நீயும் எனை தளர்த்தும்  அந்த நிமிடங்களை தெரிந்திருந்தாய்.

நடு இரவில் உன் அழைப்பு மணியருகில் அழுத்தவா வேண்டாமா என்ற அங்கலாய்ப்புடன் பாரங்களை சுமந்தபடி ஊசலாடிக்கொண்டிருந்தேன்..பின்னும் அனன்யா என் மரியாதைக்குரியவளே, எனை லேசாக்கும் உன் பரிசுத்த சிரிப்புடன் திரைச்சீலை விலக்கி நீ தோன்றினாய்.என் ஸ்நேகிதியே உனை தொழவென நீழும் கைளின் நடுக்கங்களை இனியும் மறைப்பதாயில்லை. என் குற்றங்களுக்கெல்லாம் கழுவாக உனையே சரணடைந்தேன்.
கைவளையல்கள்  நழுவி விழுமளவு மென்மையானவளே எப்போதும் போல் என் பாரங்கள் இப்போதும் உனை அழுத்தாது என்கிறாய்.நீ ஊடுவப்பார்க்கும் உற்று நோக்குதல்களில்  தான் நான் தூயதாகிறேன்.மழைக்கு முன்னொரு கூதல் காற்றாய் உனை உணர்த்தும் வாசங்கள் நாசிகளில் ஊற ஊற என் நரம்பெல்லாம் நீயாகி உள்ளே முளைக்கத்தொடங்குகிறாய். குழந்தையின் தும்மல் கணம் போல் சட்டென,பார்ப்பதற்கு அதிஅழகாய் நேர்ந்து விடுகிறது இம்மாறுதல்கள்.

எரிகின்ற சூரியனின் இறங்கும் என் முதுகிலே தான் துளியளவும் வாட்டமின்றி இன்னும் படர்திருக்கிறாய் அனன்யா. என் கைகளை குவித்து உனை அதற்குள் பாதுகாக்கவே முயல்கிறேன். நீயோ குளிர்ந்த முத்தங்களை பூமியில் இறக்கி எனை இயக்கிக்கொண்டிருந்தாய் நானும்  அந்தியெல்லாம் உன் விரல்களை பற்றியபடி பெருத்த சங்தோஷங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன் ,தேம்பி நடுங்கும் என் உதடுகளை உன்னிடமிருந்து மறைத்திருந்தேன். ஆனாலும் என்னோடும் நின்னோடும் முடிகின்ற பொழுதுகளில் எனைச்சூழ்ந்த தழும்பெல்லாம் ஆறும் ஆறும் என்றபடி உனை போர்த்தி எனை துயில்வித்தாய்.காலைக் கோப்பியைவிட இதமாயிருக்கும் உன் உஷ்ணத்தின் கீற்றுப்பட்ட என் புலர்தல்கள். அனன்யா.....

நடுங்குமென் நினைவுகளின் கடந்த நாட்கள் பற்றி இப்போது என்னிடம் கேட்பாயாக.
தீ இல்லாது எரியும் இத்திரியை மெதுவாய் அணைக்கத் தெரிந்தவளே இத்தனை வருடங்கள் புறக்கணிப்பின் ஊசிகளால் எனை குத்திக்கொண்டிருந்தேன். மர்மத்தின் சுடர் போல எனை மறைக்கவென முக்காடிட்டிருந்தேன்..அனன்யா என் தாயுமானவளே சிறுமையுற்றவனாய் உணர்ந்திருந்தேன்-ஒரு புழு போல.ரயில் ஓடும் வயல்வெளிகளில் ரகசியமாய் உதிர்ந்து விடும் சிறு கதிர்மணியாய் யாருமறியாதபடி தோல்விகளில் உடைந்திருந்தேன் தாயே.என் கறைகளை கழுவும் மழையிலும் நான் நனைந்ததில்லை எந்த துளியும் போதுமானதாயிருக்கவுமில்லை. எனை எப்போதும் ஒப்பிக்கவிரும்பாத நான் தான் இப்போது உன் அரும் தோள்களில் புதைந்தபடி இதையெல்லாம் சொல்கிறேன்.

என் அனன்யா நீ மெதுவாய் ஸ்பரிசித்தால் இப்போது இந் நடுக்கங்கள் நிற்க்கக்கூடும். உன்மடிதனில் உடைந்தழுது விடுவேன் போலிருக்கிறது. மூன்றாம் சந்திப்புக்கள் முக்கியமானவை. இப்போது தான் உன்னிடமாய் ஒப்பிக்கிறேன்.அனன்யா காலம் நமை வெகுவாய் நெருக்கையில் உன்னிடம் எனக்கான நாட்களை நீட்டிக்கும் வல்லமை தாராய்.ஓரேயொரு முறை அனன்யா என் கேசம் கலைத்து ,தாடைகளில் விரல் பரப்பி, மெலிதாய் அரும்பியிருக்கும் உரோமங்களில் முத்தமிடு.அற்புதமான தருணங்கள் கண்மூடுகையில் நிகழும் ஆனாலும் நொடியளவும் இமைமூடாதே என் அதிஅற்புதமே.என் கண் பார். எதிலும் இனிமையான உன் தளிரடி விரல் பற்றி, கண்ணில் ஒற்றி முத்தமிடுகிறேன். அனன்யா இத்தனையும் நீயென்றானபின் இனி இமை மடிவேனோ?உனைத் தொழுதெழும் பக்தியின் பரவசங்களில் மட்டும் இமை மூடித்திறக்கட்டும். நான் பார்க்குமிடமெல்லாம் எனக்காய் தெரிக்கிறாய். கூரிய கண்களாய் தடை உடைக்க கற்றுத்தருகிறாய். உனை சரணடைவதில் தோற்கின்ற என் கர்வங்கள் குறித்த பயம் ஏதுமில்லை.ஆதலால் நம்மோடு இழைகின்ற ஈரக் கனவுகளால் நமை பின்னிக்கொள்வோம்.
  

அனன்யா நம் சந்திப்புக்கள் தீர்ந்து உன்னிலிருந்து உதிரும் காலங்களில் விஷம் போல நெஞ்சை அடைக்கும் துயரை காடுகளெங்கும் பாடியபடி அகல்வேன். தித்திப்பு மிக்க இந்தக் கணங்களில் இறுகத்தழுவி என்னிடமிருந்து உனை பறிக்கப்போகும் காலத்தை நிந்திக்கிறேன். காமுறுதல் கலையென கற்பித்தவளே தாழிடாத உன் கதவினிலே ஏதேனும் வாக்கியத்தை எழுதிவைப்போம். நிரந்தரமாய் இக்கதவுகள் அடைபடுகையில் தழுதழுக்கும் துயரத்துடன் வாசலில் நின்றபடி கடைசியாய் முழந்தால் படியிட்டு சொல்லிவிட்டு போவேன். அனன்யா.......அனன்யா நீ போதையாய் இருக்கிறாய். இப்போது எனக்கு போதுமாயும் இருக்கிறாய். 

-அதிசயா-

3 comments:

  1. மிகவும் அருமை....
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமை.. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அருமை. சிறப்பான எழுத்து நடை. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...